அக்குறணை பிரதேசத்தில் 25 வருடங்களாக தீர்வின்றி தொடரும் வெள்ளப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக ஆற்றில் மேலதிகமாக சேரும் மண் மற்றும் குப்பை, கூளங்களை அகற்றி ஆற்று மணலை சுத்தீகரித்து ஆற்றின் நீரோட்டத்தை சீரமைக்கும் பாரிய வேலை திட்டம்!
அமேரிக்காவின் USAID SCOPE நிறுவனத்தின் நிதி உதவியுடன் அக்குறணை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வமத தலைவர்கள், அக்குறணை ஜம்மியதுல் உலமா, வர்த்தக சங்கங்கள், சமூக நிறுவனங்கள், மற்றும் முக்கியஸ்தர்களின் ஒத்துழைப்புக்களுடன் இந்த செயற் திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மேலும் இந்த செயற் திட்டத்தை நடைமுறையில் ஒருங்கமைக்கும் பணியினை அக்குறணை பிரதேச சபை மேற்கொள்ள இருக்கின்றது.
இதன் முதற்கட்ட கலந்துறையாடல்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமேரிக்காவின் USAID SCOPE நிறுவனத்தின் இச்செயற் திட்டத்திற்கான பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இதன் பொழுது சுமார் 4 மில்லியன் ரூபாய்கள் பெருமதியான இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த செயற் திட்டத்தையும் நிறைவு செய்து முடிக்க சுமார் 10 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த இயந்திரத்தை பயன்படுத்துகின்ற முறைமைகளை விளக்குகின்ற மற்றும் இந்த செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் அமர்வு கடந்து சில தினங்களுக்கு முன்அக்குறணை பிரதேச சபையில் நடைபெற்றது.
மேற்குறித்த கலந்துரையாடலில் அமரபுர நிகாயவின் அனுநாயக்கர் உதித்த தேரர் உட்பட சர்வமத தலைவர்கள், கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்கள், அக்குறணை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், மத்திய மாகாண உதவி ஆணையாளர் திருமதி நிலுகா புலத்கே அவர்கள், அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி அபேசிங்க அவர்கள், அக்குறணை ஜம்மியதுல் உலமா தலைவர் சியாம் மௌலவி அவர்கள், அக்குறணை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், இச்செயற் திட்டத்துடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள், குறித்த இயந்திரத்தை பயன்டுத்துவறக்கான புவியியல் அமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இந்த இயந்திரம் மூலம் அகழந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட மணலினூடாக எவ்வாறு பிரயோஜனங்களை பெற முடியும் என்பது குறித்தும் அதன் தொழில் முனைவுத்திறன் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
கருத்துரையிடுக